நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 தலைமுறையின் பெருமைகள் தரும் இனிமை

- கோவி . லெனின்

தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் நெடிய வரலாற்றைக் கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துசமவெளி நாகரிகம் என்பது தமிழர்களின் திராவிட நாகரிகம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள கோவில்கள், கோட்டைகள், பழைய மாளிகைகள் ஆகியவை நம்முடைய பாரம்பரியக் கட்டடக் கலையின் வடிவங்களாக இருக்கின்றன. அதுபோலவே தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், அறிவியல் திறன்கள் ஆகியவற்றை இன்னும் பாதுகாத்து வைத்திருக்கும் நடைமுறைகளும் இருக்கின்றன. இவற்றை அறிந்து கொள்ளும் ஆவலுடன் மேற்கொள்வதே பாரம்பரியச் சுற்றுலா.


1800 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன் கல்லணையைக் கட்டினார். 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார். இன்றளவும்
இந்த இரண்டும் நிலைத்து நிற்கின்றன. அறிவியல் வளர்ச்சியோ, பொறியியல் தொழில்நுட்பமோ இல்லாத அந்தக் காலத்தில் இந்த இரண்டு சாதனைகளும் எப்படி சாத்தியமாயிற்று என்பதை பாரம்பரியச் சுற்றுலாவின் மூலமாக அறிந்து கொள்ள முடியும். 

செட்டிநாட்டுப் பகுதிகளில் உள்ள பழமை மாறாத வீடுகள், மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, திருவாரூர் தேரோட்டம், தைப்பூசத்தின்போது பழனிக்கு பக்தர்கள் எடுக்கும் காவடி, தென்மாவட்ட மக்களின் முளைப்பாரி எடுத்து வழிபடும் பழக்கம், குறிப்பிட்ட சமுதாயங்களில் நடைபெறும் மொய் விருந்துகள், மலைப்பகுதிகளில் உள்ள மக்களின் இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறை இவை போன்ற பலவும் நமது பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுவனவாகும். 

நாம் வாழும் நிலத்தை எப்படிப் பகுத்து வாழவேண்டும் என்பதை உலகத்துக்குக் காட்டிய இனம்  தமிழினம். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், வறண்ட நிலம் பாலை என நிலங்களைப் பகுத்து, அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பழந் தமிழர்கள். நீலகிரி மலை, கல்வராயன் மலை போன்ற இடங்களில் இன்னும் இயற்கையையொட்டிய வாழ்வை மேற்கொள்ளும் மக்கள் இருக்கிறார்கள். கடற்பகுதிகளில் வாழும் மக்களும் இயற்கையை சார்ந்தும் அதன் சீற்றங்களை எதிர்கொண்டும் வாழ்கிறார்கள். புவிவெப்பம் அதிகரிப்பு, வறட்சி நிலைமை, சுனாமி, தானே புயல் என இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ள இயலாமல் வாழும் இன்றைய தலைமுறைக்கு, நம் தமிழர்களின் முந்தைய தலைமுறை எப்படி வாழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது. அதற்குத்தான் பாரம்பரியச் சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

பாரம்பரியச் சுற்றுலாவில் பங்கேற்று, வாழ்வை இனிமையாக அனுபவிக்கும் கலையைக் கற்றுக்கொள்வோரால் எந்தச் சூழலிலும் மனநிம்மதியுடன் வாழ முடியும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :