நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 இயற்கை தரும் இனிய சிகிச்சை

- கோவி . லெனின்

முன்பெல்லாம் வீட்டில் யாராவது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு முறை குற்றாலத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டு வாங்களேன் என்பார்கள். குற்றால அருவிகளில் குளித்தால் மனநலப் பிரச்சினைகள் தீர்ந்து, இயல்பு நிலைக்கு வருவார்கள் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. பொதிகை மலைச் சாரலில் உள்ள குற்றால அருவிகளில் பலவித மூலிகைகள் கலந்த தண்ணீர் கொட்டுகிறது. இதில் நீராடும்போது, அந்த நீரின் வேகமும் அதில் கலந்துள்ள மூலிகைகளும் தலைப்பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் விழும்போது மருத்துவப் பயனைக் கொடுக்கிறது. அதனால்தான், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றாலம் செல்லும்படி மூத்தவர்கள் பரிந்துரைத்தார்கள்.இன்றும் தமிழகத்தில் உள்ள பல அருவிக்கரைகளிலும் சித்தம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடும் பழக்கம் தொடர்கிறது. இந்த மசாஜிற்குப்பிறகு அருவிக்குளியலில் ஈடுபடும்போது உடம்பின் சூடு தணிவதுடன், சோம்பலும் நீங்கிவிடுகிறது. இதனால் மனிதர்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் செயல்படமுடிகிறது.

தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்கள் பலரும் மலைப்பகுதிகளிலும் அருவிக் கரைகளிலும் தவமிருந்தும் தங்கியிருந்தும் அரிய மூலிகைச் செடிகளைக் கண்டறிந்து, அவற்றின் மருத்துவப் பயன்களைக் குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார்கள். சங்கேத வார்த்தைகளுடன் சித்தர்கள் எழுதியவை பற்றி தற்போது ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால், அந்த மூலிகைகளின் பலன்களைப் பெறுவதற்கான மருத்துவச் சுற்றுலாக்களும் பெருகி வருகின்றன. 

     
கொல்லிமலைப்பகுதியில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள காரையாறு அருவிப் பகுதியில் மஞ்சள் காமாலை நோயை ஒரே ஒரு மூலிகை உருண்டையால் குணப்படுத்தும் பாரம்பரிய வைத்திய முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மூட்டுப் பிரச்சினைகளுக்கும் எலும்பு முறிவுகளுக்கும் தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள பூசானம்பட்டியில் இயற்கை முறையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

ஆயுர்வேத முறையிலான இயற்கை சிகிச்சைகளுக்கு கேரள மாநிலம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்குள்ள குமரகத்தில் அளிக்கப்படும் சிகிச்சை பெறுவதற்காக  அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து பலநாட்கள் தங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோல பொதுமக்களும் இங்குசென்று சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறாகள்.

இயற்கை சார்ந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு சித்த-ஆயுர்வேத-பாரம்பரிய மருத்துவமுறைகளின் அடிப்படையில் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் மருத்துவச் சுற்றுலா அண்மைக்காலமாக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, அலோபதி மருத்துவத்தின் அடிப்படையிலான சிகிச்சைகளுக்கும் இப்போது மருத்துவ சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உடல்நலன் குன்றியோருக்கு மட்டுமல்ல, நல்ல உடலைநலனைப் பாதுகாக்க நினைப்போருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது மருத்துவச் சுற்றுலா.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :