நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 அறிவைப் பெருக்கும் பொழுதுபோக்கு

-கோவி . லெனின்

கற்றலில் கேட்டலே நன்று என்பது முன்னோர் வாக்கு. கேட்டலிலும் பார்த்தல் மிக நன்று என்பது இன்றைய அனுபவம். வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களையும் அறிவியல் ஆய்வுக்ள் சார்ந்த நிலையங்களையும் மாணவர்கள் நேரில் சென்று பார்க்கும்போது, அவர்களின் அறிவு விரிவடைகிறது. சிந்தனையாற்றல் பெருகுகிறது. புதிய முயற்சிகளும் அதற்கான முனைப்புகளும் தொடங்குகின்றன. எதிர்காலத்தில் விஞ்ஞானியாகவோ, பொறியாளராகவோ, மருத்துவராகவோ, இலக்கியவாதியாகவோ வளர்வதற்கான விதை முளைக்கிறது. இதுவே கல்வி சுற்றுலாவின் சிறப்பாகும்.தமிழகத்தில் கல்வி சுற்றுலா மேற்கொள்ள ஏராளமான இடங்கள் உள்ளன. பொதிகை மலையிலிருந்து உற்பத்தியாகும் குற்றால அருவி, குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரியின் பிரம்மாண்டத்தைக் காட்டும் ஒகனேக்கல் அருவி போன்ற பல இடங்களின் பின்னணியைத் தெரிந்துகொள்ளும்போது அது வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, கல்வியறிவை வளர்க்கக்கூடியதாகவும் அமைந்துவிடுகிறது.

1800 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன் கட்டிய உலகின் முதல் அணையான கல்லணை, தமிழகத்தின் விளைநிலங்களை செழிப்பாக்கும் மேட்டூர் அணை, தென்மாவட்டங்களை வளம்பெறச் செய்யும் வைகை அணை உள்ளிட்ட பல அணைகளும் கல்விச்சுற்றுலாவின் கீழ் காண வேண்டிய இடங்களாகும். இவை மட்டுமின்றி, தஞ்சை பெரியகோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், மாமல்லபுரம் கடற்கரைக்கோவில், அந்நகரத்தில் உள்ள பல்லவர் காலச் சிற்பங்கள், ஐந்து ரதம் உள்ளிட்ட பலவும் தமிழகத்தின் நெடிய வரலாற்றை நமக்கு எடுத்துக்காட்டுவனவாகும்.

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் என்பது மாணவர்களுக்கு வரலாற்றையும் இலக்கியத்தையும் சேர்த்து வழங்கக்கூடியதாகும். குமரி முனையிலே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, அதனருகே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் ஆகியவையும் மாணவர்களுக்குப் புதிய செய்திகளைத் தருகின்ற இடங்களாகும். பழந்தமிழர் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் இடமாக பூம்புகாரில் உள்ள கலைக்கூடம் அமைந்துள்ளது. அங்குள்ள நெடுங்கல்மன்றம், பாவை மன்றம், சிலம்புக்கூடம் ஆகியவை சிலப்பதிகாரமும் பட்டிணப்பாலையும் சித்தரிக்கும் காவிரிப்பூம்பட்டிணத்தை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.

வரலாற்றை மட்டுமின்றி, அறிவியல் வளர்ச்சியையும் கல்விச் சுற்றுலா நம் மாணவ-மாணவியருக்கு அளிக்கிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம் வானியல் பற்றிய செய்திகளை படக்காட்சிகள் மூலமாகவும், தொலைநோக்கிகள் மூலமாகவும் தெரிவிக்கிறது. கானூரில் உள்ள தொலைநோக்கி மையமும்  மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்க உதவுகிறது. சென்னை அருகே வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பலவிதமான விலங்குகளும் பறவைகளும் நீர்வாழ்வனவும் உள்ளன. அரிய உயிரினங்கள் பற்றிய விவரங்களை இந்த உயிரியல் பூங்காவிற்குச் சுற்றுலா செல்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. செம்மொழிப் பூங்காவில் தாவரங்களின் தன்மைகள் குறித்த குறிப்புகள் நிறைந்திருப்பதால் அங்கும் மாணவர்கள் நிறைய தகவல்களைப் பெற முடியும். சென்னை எழும்பூரிலும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. இங்கு நம் நாட்டின் வரலாறு தொடர்பான பல ஆவணங்களையும் கலைப்பொருட்களையும் காண முடியும் தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டையும் அதிலுள்ள அருங்காட்சியகமும் வரலாற்றுச் செய்திகளை நமக்கு அளிக்கின்றன. அதுபோன்றே தலைவர்கள் பிறந்த இடங்கள், அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்களின் நினைவிடங்கள் மூலமாகவும் அரிய தகவல்களை நாம் பெற முடியும். 

ஒவ்வொரு மாணவரும் தமக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்வதன் மூலம் புதிய தகவல்களை அறியலாம். பள்ளி-கல்லூரிகள் மூலமாக கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும்போது கட்டணம் குறைவதுடன், பல இடங்களைப் பார்ப்பதற்கான அனுமதியும் எளிதாகக் கிடைக்கிறது. கல்வி சுற்றுலாக்கள் சமீபகாலமாக சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :