நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

டந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காவோ அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ கோயில் நிர்வாகிகளிடம், சிலைவடிக்கும் சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும் போது, தாரமங்கலம், தாடிக்கொம்பு, பேரூர், பெரியபாளையம் கோயிலில் உள்ள சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோயில்களில் உள்ளதை போன்ற சிற்பங்களை நாங்கள் செய்துகொடுக்கிறோம் என்று என்று சொல்லித்தான் இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள்.

மேற்கூறிய நான்கு ஊர்களிலும் உள்ள கோவில்களிலும் உள்ள சிற்பங்களை போன்ற சிற்பங்களை செய்ய “நாங்கள் தயாராக இல்லை” என்று இன்றைய சிற்பிகள் சொல்லாமல் சொல்லுகிறார்கள். அந்த அளவுக்கு வேலைப்பாடும், நேர்த்தியும் மிகுந்த சிற்பங்களை கொண்ட “கைலாசநாதர்” ஆலையம், சேலத்தை அடுத்த தாரமங்கலத்தில் உள்ளது. சேலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில், ஓமலூர்-சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஊர்.

ஆலயத்தில் நாயகனாக இருக்கும் கைலாசநாதர், சிவகாமசுந்தரி இனையாரின் ஆன்மீக நம்பிக்கைகளை காட்டிலும், புராதான முக்கியத்துவம் வாய்ந்த பல வரலாற்று தகவல்கள் இந்த கோயிலில் கல்வெட்டுப் பதிவுகளாக உள்ளது.

தாரமங்கலத்தை அடுத்த அமரகுந்தி என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த கட்டிமுதலி (கெட்டி முதலி என்றும் கூறுகிறார்கள்) என்ற சிற்றரசனின் அரண்மனையிலிருந்த மாடுகளை மேய்ச்சலுக்காக இடையர்கள் காட்டிற்கு ஓட்டிச்சென்று மேய்த்துக்கொண்டிருந்த போது, ஒரு இடத்திற்கு போகும் மாடுகள் அந்த இடத்தில் தன் மடியிலிருக்கும் பாலை எல்லாம் பொழிந்து விட்டு திரும்பியதாகவும், இடையர்கள் கூறியதை நம்பாத கட்டிமுதலி மாடு மேய்க்கும் இடையர்களை தண்டித்ததாகவும், அன்று இரவு கட்டிமுதலியின் கனவில் தோன்றிய “இறைவன்” உன்னுடைய மாட்டு பால் எனக்கு தான் கொடுக்கப்பட்டது என்று கூறி மறைந்ததாகவும், பிறகு மாடுகளை பின்தொடர்ந்து கண்காணித்து சென்ற கட்டிமுதலி ஓரு இடத்தில் மாடுகள் தானாகச்சென்று பாலை பொழிந்துவிட்டு வருவதை பார்த்து விட்டு அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது இறைவன் சுயம்புவாக தோன்றியிருந்ததாகவும், அங்கே  ஒரு புதையல் இருந்ததாகவும் அந்த புதையலை எடுத்ததே இந்த ஆலயம் கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. 

“கோயில்” என்பது இறைவன் இருக்குமிடம் என்று இப்போதைய நூல்கள் மற்றும் இதிகாசங்கள் கூறினாலும், முத்தைய காலங்களில் மன்னன் “கோ” இருக்கும் இடம் தான் “கோ” இல்லம் “கோயில்” என்பதற்கு சான்றாக இந்த கோயில் பல சம்பவங்களை கூறுகிறது. எதிரி நாட்டு படையினர் இந்த ஊரையும், மக்களையும் படைகொண்டு தாக்கவரும் போது, அந்த மக்களையும், பொன், பொருளையும் கொண்டுபோய் கோயிலுக்குள் மறைத்து வைத்து பாதுகாப்பதற்கு என்ற வகையில்தான் இந்த கோயிலின்  கோபுரவாயில் கட்டப்பட்டிருக்கிறது.

மேற்கு பார்த்தபடி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் ஐந்து நிலைகளை கொண்ட இராஜகோபுரம் 90, அடி உயரமுடையது. அதன் நுழைவாயிலில் மேலே செல்வதற்கும், காவல் இருப்பதற்கும் ஏற்ற அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. வாசலில், இருபது அடி உயரமுள்ள இரட்டைக்கதவு “வேங்கை” மரத்தினால் செய்யப்பட்டது. இந்த கதவின் முன்பக்கத்தில் ஓவ்வொரு கதவிலும் 60 உலோக குமிழ்கள் வீதம் 120 குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. யானைகளை கொண்டுவந்து மோதவிட்டு கதவுகளை உடைக்கும் வழக்கமுள்ள அந்த காலங்களில் யானை மோதி கதவை உடைக்க முடியாதபடி யானையின் மண்டையை கிழிக்கும் வகையில் இந்த குமிழ்கள் சிறந்த நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

கதவை திறந்து உள்ளே கால் வைத்தால் உடலில் உள்ள வெப்பம் முழுவதையும் இழுக்கும் வகையில் இரண்டு அடி அகலத்தில் சிவப்பு நிறத்தில் பெரிய “பவளக்கல்” ஓன்று வைத்து படி அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் சென்று விட்டு திரும்பும் அனைவரும் ஒரு நிமிடம் இந்த கல்லில் உட்கார்ந்தால் போதும் நம் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்துவிடும் என்று கூறுகிறார்கள். சிவப்பு கல்லில் பல அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல் தமிழகத்தில் கிடையாது. வேறு எங்கோ இருந்து கொண்டு வந்து இந்த படிக்கட்டுக்கு பயன்படுத்தியுள்ளார்கள்.

பிரமிப்பாக அந்த கல்லை நம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கோபுரத்தின் மேல் தளத்தில், கீழேதெரியும் வண்ணம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வில், புலி, மீன். சின்னங்களுடன் இந்த பகுதியை ஆண்ட கட்டிமுதலியின் “வண்ணத்தடுக்கு வாடாமாலை” சின்னமும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் ஆலய தரிசனம் முடிந்துவிட்டு வெளியே வரும் மக்கள், இந்த கோபுரத்தின் உள்ளே இருக்கும் எட்டு படிக்கட்டுகளை ஏறி வருவதற்கு ஏற்றபடி இந்த கோபுரத்தின் உட்பிரகார படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். இந்த கோபுரமே ஒரு தேராகவும், அந்த தேரை யானைகள் குதிரைகள் கட்டியிலுப்பது போலவும் கற்சிப்பங்கள் அமைத்துள்ளனர்.

கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றதும், இடதுபக்கம், ஒரே சிவலிங்கத்தில் 1008 லிங்கங்கள் வரையப்பெற்ற “சகஸ்ரலிங்கம்” சன்னதி உள்ளது. உலகம் இப்படித்தான் இருந்தது என்பதை விளக்கும் வகையில், இந்த கோயில் சுவற்றில் பல நீர்வாழ் உயிரினங்கள், வனத்தில் வாழும் உயிரினங்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. “பசு” லிங்கத்தின் மீது பால் பொழியும் காட்சி, கண்ணப்ப நாயனார் லிங்கத்துக்கு கண் வைத்த காட்சி, ஒரு பெண் தன்னுடைய குழந்தையை மடியில் கட்டிகொண்டு பூப்பரிக்கும் காட்சி ஆகிய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் பின்புறம் மதில்சுவரை ஓடியுள்ள இடத்தில் “பஞ்ச”லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இராஜகோபுரத்தின் வலப்பக்கம் அவினாசியப்பர் சன்னதி உள்ளது. உள்ளேயிருக்கும் அவினாசியப்பர் சதுரவடிவில் அமைந்துள்ளார். இறைவனின் முன்னே வீற்றிருக்கும் நந்தி மற்ற கோவில்களில் இருப்பது போல இல்லாமல் “அலங்காரநந்தி”யாக இருக்கிறது. சிறந்த அலங்கார வேலைபாடுகளுடன் உண்மையான நந்தியைபோலவே அமைந்துள்ளது.

1310-ம்,ஆண்டு டெல்லியை ஆண்டு வந்த மாலிக்கபூர், தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தபோது, முதலில் தாக்குதலுக்கு உள்ளான இடம்தான் தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம். அதன் பின்னர், சிதம்பரம், மதுரை, ஆழகர்கோயில் என்று படையெடுத்து சென்று அங்குள்ள கோவிலில் இருந்த பல செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு தாரமங்கலம் வழியாகத்தான் தன்னுடைய நாட்டுக்கு திரும்பிச்சென்றான்,

அப்போது, காடுகளில் மறைந்திருந்த கட்டிமுதலியின் வீரர்கள், மாலிக்கபூர் ஒட்டகங்களின் மீது வைத்து எடுத்துச்சென்ற பொன், பொருளை பிடுங்கிக்கொண்டு போய் ஆத்தூரில் உள்ள கோட்டையை கட்டினர் என்று சொல்லப்படுகிறது. அந்த வரலாற்றை இந்த ஆலயத்தில் உள்பிரகார சுவர்களில் உள்ள கல்லில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

வளைந்த வாளுடனும், நீன்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவால், கேடையத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர் காட்சிகள், மதுரையில் மீனாட்சியம்மனுக்கு கரும்பை கொடுத்து மாலிக்கபூர் பரிகாசம் செய்த காட்சி, பின்னர் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் யானை, ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு திரும்பி செல்லும் காட்சி, திரும்பிச்செல்லும் மாலிக்கபூரை வழிமறித்து கட்டிமுதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி, பின்னர், மதுரையில் கொள்ளையடித்துக் கொண்டு யானை ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு வந்த பொருட்களையெல்லாம் கட்டிமுதலியின் வீரர்கள் பரித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஓன்று மாலிக்கபூரோடு செல்லுவது போன்ற ஒரு காட்சியும் மிகவும் அழகிய வேலைப்பாட்டோடு கற்சுவரில் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். இதில் பல வரலாற்று உண்மைகளும் இருக்கின்றன.

 அவினாசியப்பர் ஆலயத்தின் அருகில், ஒன்பதே கற்களால் செய்யப்பட்ட சிறியதொரு கற்கோயில் உள்ளது, ஒருமுறை கல்லில் சிற்பவேலை செய்யும் சிற்பிகளுக்கும், சுண்ணாம்பு சுதையில் கோபுரங்கள் அமைப்போருக்கும் ஒரு போட்டி ஏற்பட்டதன் விளைவாக நாங்கள், உங்களின் துணையில்லாமலே கல்லில் கோபுரம் அமைக்க முடியும் என்று கூறி கற்சிற்பிகள் அமைத்த ஒரு சிறிய கற்கோயில் இங்கு உள்ளது. இது தற்காலத்தில் “சித்திவினாயகர்” கோயில் என்று அழைக்கப்படுகிறது.

கைலாசநாதரின் பிரகாரத்துக்குள், நுழையும் வாயிலின் முன்புறம் திண்ணைபோல அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில், மேல் தளம் 13 கற்களை கொண்டு அமைத்துள்ளனர். அதில் குரங்கு, அணில் போன்ற விலங்குகள் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு பார்த்தபடி ஒரே கல்லிலான 13 அடி உயரத்தில் ஆறு கற்தூண்களில் குதிரையின் மீது அமர்ந்து வேட்டைக்குச் செல்லும் ஒரு வீரன் புலியை குத்தி கொள்ளும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இதில், புலித்தலையில் ஏறியிருக்கும் வேல் மறுபக்கம் வெளியே வரும் காட்சியை அழகாக செதுக்கியுள்ளனர்.

ஒவ்வொரு தூணின் வலது புறம் ஒரு அமைப்பிலும், இடதுபுறம் ஒரு வேறு அமைப்பிலும் இந்த குதிரையும் அதன் மீதுள்ள வீரரும் இருக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிலையில் உள்ள குதிரையின் திறந்திருக்கும் வாயில் உள்ள பற்களுக்கு உள்ளே ஒரு கற்பந்தை (கல்லில் செய்யப்பட்ட பந்து) நம் விரலால் தள்ளி உருட்டி விளையாடும் வகையில் அமைத்துள்ளனர். 

இதே மண்டபத்தின் வடக்கு ஓரத்தில், எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. எறும்பு காது, மூக்கு, பிறகு தாடியில் நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் சிறிய துவாரங்களை அமைத்து கல்லில் சிலை செதுக்கியுள்ளனர். மண்டபத்தை சுற்றிலும் கண்ணகியின் கால் சிலம்பை போன்ற சிலம்புகளை கொண்டு அடுக்கப்பட்ட சங்கிலித்தொடர் அலங்கார வேலைப்பாடு செய்துள்ளார்கள், ஒவ்வொரு  சிலம்புக்கு இடையிலும் சிறிய துவாரங்கள் கொடுத்து சிலை வடித்துள்ளார்கள்.

மண்டபத்தில் நுழையும் இரண்டாவது கதவும் “வேங்கை” மரத்தில் செய்யப்பட்டுள்ளது, உள்ளே இடது பக்கத்தில் ரிஷிபத்தினி சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பெரியது மானமா..? தர்மமா..? என்பதை தெரிந்து கொள்வதற்காக இறைவன் மாறுவேடத்தில் வந்து ஒரு குடியானப் பெண்ணிடம் “பிச்சை” கேட்கிறார்.

கேட்டவருக்கு “இல்லை” என்று சொல்லாத “தமிழ்குடியில்” பிறந்த அந்தப்பெண், அகப்பையில் அன்னத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக வீசியதால் அந்த பெண்ணின் மார்புச் சேலை விலகிவிடுகிறது.

தானத்தைவிட “மானமே” பெரிதெனக் கருதிய அந்தப்பெண், தன்னுடைய இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து வந்த ஒரு கிளி பெண்ணின் வலது கையிலிருக்கும் அகப்பை சாதத்தை எச்சம் செய்து விடுகிறது.

அந்த பெண் இறைவனுக்கு உணவு கொண்டு செல்லும் காட்சி முகமலற்சியோடும், கிளி சாப்பிட்டு எச்சமாகிவிட்டதால், அந்த பெண் கோபத்தில் இருக்கும் காட்சியும் இரண்டு சிலைகளாக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இடதுபக்க மூலையில், பொன், பொருளை பாதுகாத்து வைப்பதற்காக ஒரு பாதாள அரை அமைத்து வைத்துள்ளார்கள், இதில், இப்போது ஒரு சிறிய லிங்கத்தை  வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் உள்ளே சென்று தரிசனம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூண்களும், ஒரே கல்லில். செய்யப்பட்டவை. முன்னால் இரண்டு சிறிய தூண்களும், பின்னால், ஒரு பெரிய தூணும் இருக்கும் வகையில் அடிக்கப்பட்ட இருபத்தி மூன்று தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கணக்கிடமுடியாத சிற்ப வேலைப்பாடுகளை காணமுடிகிறது. சிவனின் பல தோற்றங்களும், பிரம்மாவின் அவதாரங்களும் கல்லில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன. ரதி, மன்மதன் சிலையும், ராமர் அம்புவிடும் காட்சியும் மிகவும் நுணுக்கமாக அமைத்துள்ளனர்.

அதாவது, இராமன் அம்புடன் பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால், வாலியும், சுக்ரீவனும் இருப்பது தெளிவாகத்தெரியும், ஆனால், வாலி இருக்குமிடத்திலிருந்து பார்த்தால், இராமர் பதுங்கியிருப்பது தெரியாது.

அதுபோலவே, ரதியை, மன்மதன் மறைந்திருந்து பார்க்கும் காட்சியும் அமைந்துள்ளது, அன்னப்பறவையின் மீது அமர்ந்திருக்கும்  ரதி இருக்குமிடத்திலிருந்து மன்மதனை காணமுடியாது, ஆனால், கிளியின் மீது அமர்ந்திருக்கும் மன்மதன் பார்த்தால்,  ரதியை தெளிவாக காணமுடியும் வகையில் இந்த சிற்பங்களை அமைத்துள்ளார்கள். இதுதவிர இன்னும் பல வரலாற்று செய்திகளையும் இந்த கற்சுவர்களில் செதுக்கியுள்ளார்கள். அதை வரலாற்று ஆய்வாளர்கள் பார்த்தால் பொருள் புரிந்து கொள்ளமுடியும்.

ஆற்றிலிருக்கும் மணலை சிவலிங்கமாக பிடித்து வைத்து பார்வதி பூஜை செய்துகொண்டிருக்கும் காட்சி, சாப விதிப்படி ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மாவின் தலையை சிவபெருமான் ஒரு தலையை கிள்ளி எடுத்தபிறகு நான்கு முகங்களுடன் இருக்கும் காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. முதலில் ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மா அடுத்த சிற்பத்தில் நான்முகனாக காட்சி கொடுக்கிறார்.

மகா மண்டபத்தில் மூலவராக இருக்கும் கைலாசநாதரின் சன்னதிக்கு முன்புறம் சிவனுக்கும், பார்வதிக்கும் நடக்கும் திருமணக்காட்சி செதுக்கப்பட்டுள்ளது, பிரம்மா பார்வதியை சிவனுக்கு கரம்பிடித்து கொடுக்கும் காட்சி மூலவர் சன்னதியின் மேலே சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.

மூலவருக்கு முன்புறம் உள்ள மண்டப மேற்க்கூறையில், ஏழு அடி நீளமும் அகலமும் கொண்ட ஒரே கல்லில், விரிந்த எட்டு தாமரை இதழ்கள் காணப்படுகிறது, ஒவ்வொரு தாமரை இதழின் மீதும் தன் வாளால் ஒட்டிப் பிடித்தபடி ஒரு கிளிகள்  தொங்கிக்கொண்டு தாமரை பூவின் நடு தண்டின் மீது போட்டிருக்கும் ஒரு கல் வளையத்தை தன் அலகால் பிடித்துக்கொண்டிருக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. அந்த கல் வளையத்துக்கு கீழே இன்னொரு கல் வளையம் போட்டுள்ளனர், அந்த  இரண்டாவது கல் வளையத்தை நீலமான கம்பு இருந்தால் நாம் சுற்றிவிட்டுப்பார்க்க முடியும். இந்த தாமரை இதழை சுற்றிலும் எட்டு திசைகளிருந்தும் வரும் துவார பாலகர்கள் தங்களின் வாகனங்கள் மீது அமர்ந்திருக்கும் காட்சியும், அவர்களுக்கு அருகில் பணிப்பென்கள் நிற்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் நடுவே எட்டு கற்சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. கற்பனைக்கும் எட்டாத இந்த காட்சியை பார்த்து பிரமிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. சரியான பராமரிப்பு இல்லாமல் இந்த சிற்பங்கள் எல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது.

மண்டபத்தின் பின்பக்கம் உள்ள தூண்களில் “யாழி” மற்றும் “குதிரை”களில் பயனம் செய்யும் வீரர்களின் காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் “யாழி”யின் வாயின் உள்ளே இருக்கும் கல் செதுக்கி வெளியே எடுக்கப்பட்டு வெற்றிடமாக உள்ளது. இரண்டாவது “யாழி”யின் வாயில் கல் பந்து போலவே உருட்டப்பட்டு, உள்ளே ஒட்டிக்கொண்டிருக்கும்படி அமைத்துள்ளனர்.

மூன்றாவது “யாழி”யின் வாயில் உள்ளே இருக்கும் கல்லை ஒரு பந்து  போன்ற வடிவில் செதுக்கி யாழியின் பற்களுக்கிடையில் வாயிற்குள்ளேயே உருண்டோடும் படி செய்துள்ளார்கள், நான்காவது குதிரையின் வாயில் இருந்த கற்களை இரண்டு பந்துகளாகவும், ஐந்தாவது குதிரையின் வாயிக்குள் மூன்று கற்பந்துகள் இருக்கும் வண்ணம் நேர்த்தியாக செய்துள்ளார்கள்.

இது மேற்கு பார்த்த இந்த சிவன் கோயிலில், உள்ள இன்னொரு சிறப்பு, மாசி மாதம்-9,10,11 ஆகிய மூன்று தேதிகளில் சூரியக்கதிர் லிங்கத்தின் மீது நேரடியாகபடும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த மூன்று நாட்களிலும், மாலை ஆறரை  மணிக்கு, கிழக்கு நோக்கி வரும் சூரியக்கதிர் இராஜகோபுரத்தின் வழியாக வந்து  கொடிமரத்தில் பட்டு பிறகு ஒருபகுதி சூரியகதிர் நந்தியின் கொம்பு வழியே கிழக்கு நோக்கி சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை வடிவில் விழுகிறது. இந்த மூன்று நாளிலும் இதை காண்பதற்கு ஏராளமான பகதர்கள் இந்த ஆலயத்தில் கூடுவார்கள்.

மூலவரின் எதிரில், வலப்பக்கம் சிவகாமி அம்மையாரும், இடப்பக்கம் சுப்பிரமணியரும் காட்சி கொடுக்கிறார்கள். இந்த மூவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கும் வகையில், முன்பக்கம் ஒரு இடத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

கோயிலின் உட்பிரகாரத்தில், தெற்கு பார்த்த நிலையில் ஜுரகரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இவர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு ஞாயிற்று கிழமைகளில் விபூதி கொண்டு அர்ச்சனை செய்து அதை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் தீராத ஜூரமும் தீர்ந்துவிடும் என்கிறார்கள். தவிர மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன என்கிறார்கள்.

இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாளலிங்கம் சன்னதியாகும்,  மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன என்கிறார்கள்.

இந்த கோயிலை, முதலில் கட்டத் துவங்கியவர் மும்முடி கட்டிமுதலி என்பவராவார், அவருக்கு பிறகு, சீயாளமுதலி அவருக்கு பிறகு வணங்காமுடி கட்டிமுதலி என்பவர்தான் கட்டி முடித்தார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக மைய மண்டபத்திம் முன்பாக மூன்று பிள்ளயார் சிலைகள் வைத்து வழிபடப்படுகிறது, இந்த மூன்று சிலைகளும் மூன்று தலைமுறைகளை குறிக்கிறது.

இந்த கோயிலுக்கு இரண்டு தெப்ப குளங்கள் உள்ளது. பேருந்து நிலையம் அருகில் உள்ள 180 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர்களுடன் அமைந்துள்ளது. இந்த கர்சுவர்களின் மீது 36 நந்திகள் அமர்ந்திருக்கும் வண்ணம் குளம் அமைந்துள்ளது. மற்றொரு குளம் பத்திரகாளியம்மன் கோயில் எதிரில் உள்ளது. இந்த குளம் வட்டவடிவில் இருக்கும், உள்ளே இருக்கும் படிக்கட்டுகள் எண்கோண வடிவில் இருக்கும், ஆனால், கீழே குளம் சதுரமாக இருக்கும். இந்த குளத்தின் படிக்கட்டு கற்கல் மீது நீங்கள் ஒரு கல்லை எடுத்து வீசினால், அந்த கல் உருண்டோடி நீங்கள் நிற்கும் இடத்துக்கே வந்துவிடும் விதத்தில் குளத்தின் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இதற்கு “எட்டு வட்ட கிணறு” என்று பெயர்.

கோயில் அமைந்துள்ள இடம்

தாரமங்கலம், சேலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. பேருந்து நிலையத்தின் எதிரில் அமைந்துள்ள கைலாசநாதர் ஆலையத்தை சுற்றிப்பார்க்கவும், வரலாற்று நிகழ்வுகளை எடுத்து கூறவும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் விபரம் தெரிந்த “சுற்றுலா வழிகாட்டிகளை” ஏற்பாடு செய்து கொடுக்கிரார்கள். பக்தர்களுக்கு தேவையான தலவரலாறு நூல்களும், சிறப்பு பூஜை, அன்னதானம் போன்ற காரியகளுக்கும் கோயில் செயல் அலுவலரை அணுகலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. உங்கள் பெயரில் அன்னதானம் வழங்க விரும்பினால், அலுவலகத்தில் 500 ரூபாய் பணம் செலுத்தி விட்டால் நீங்கள் விரும்பும் நாளில், உங்கள் பெயரில் பக்தர்களுக்கு கோயில் நிர்வாக அலுவலர்கள் அன்னதானம் வழங்குகிறார்கள்.

திறந்திருக்கும் நேரம்

காலை, 7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கிய சிறப்பு தினங்களில் முழு நேரமும் நடை திந்திருக்கும். முக்கிய திருவிழா நாட்கள். தைபூசத்தன்று தேரோட்டம் இருக்கும், தவிர நவராத்திரி, சூரசம்காரம், திருவாதிரை, திருக்கார்த்திகை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும்.

பஸ் வசதி

தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு இரவு பகல் என தொடர்ந்து பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், இரயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம், நகரப் பேருந்துகளும், ஜலகண்டாபுரம் நங்கவள்ளி வழியாக மேட்டூர் செல்லும் பேருந்துகளும் தாரமங்கலம் வழியாகவே செல்லுகிறது.

கார் மற்றும் வாகனங்களில் செல்லுவோர் சேலம் இரும்பாலை வழியாகவும், ஒமலூர் வழியாகவும் தரமங்கலம் செல்லலாம். தாரமங்கலத்திலிருந்து மேற்கே 32, கி.மி தொலைவில் மேட்டூர் “ஸ்டேன்லி” நீர்த்தேக்கமும், பூங்காவும் புகழ் பெற்ற முனியப்பன் கோயிலும் உள்ளது. தெற்கே 30,கி.மி தொலைவில் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்த சங்ககிரி மலைக்கோட்டை அமைந்துள்ளது. கிழக்கே 50, கி.மி தொலைவில் மலைகளின் இளவரசி என்று போற்றப்படும் ஏற்காடு அமைந்துள்ளது.

தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள “ஆண்டவன்” சிவபெருமானின், சாகசங்களை விடவும், அந்த நாட்டை “ஆண்டவன்” கட்டிமுதலி வம்சத்தினரின் சிற்ப சாதனைகள் நம் நெஞ்சை விட்டு நீங்காதவை...

பெ.சிவசுப்ரமணியம்.
ஆத்தூர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [8]
Name : கொமரகணேசன் Date :6/25/2016 12:19:27 AM
கோயில் சிற்ப கலையை பிரபல படுத்த வேண்டும்
Name : இராமநாதன் Date :1/20/2016 2:37:41 PM
சிவ சிவ நமசிவாய மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஆலயத்தின் வரலாறு அறிந்து கொண்டது
Name : Dr.S.Vijayabaskar Date :8/27/2015 12:44:32 PM
என் பெயர் விஜய பாஸ்கர் . நானும் இந்த ஊரை சார்தவன் தான். எனக்கு என் ஊரை பற்றி அறிய ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி .
Name : பார்த்திபன் Date :4/10/2015 12:09:22 PM
நாம சிவய ஹர ஹர மகாதேவா தகவலுக்கு மிக்க நன்றி..
Name : babu Date :12/29/2013 8:00:20 PM
வேர்யுசெபுல் தங்க்ஸ்
Name : ksubramanian Date :12/20/2013 9:19:02 PM
அருமை ...அருமை ...சமீபத்தில் தான் கண்டு களித்தேன் .......சுற்றுலா கைடுகள் நன்கு விளக்கிக் காட்டினார்கள் ......இந்த கட்டுரையில் இன்னும் பல சிற்பங்கள் விடுபட்டு உள்ளன....மாவிலைதோரணம் போன்ற கல்வேலைப்பாடு ......சிவன் பார்வதி கொஞ்சும் காட்சி....பிரதோஷ நாயகன் (எங்கும் காண முடியாதவர் ).....
Name : kannan Date :12/4/2013 2:04:31 PM
தேங்க்ஸ். இந்த வரலாற்று செய்தி மிகவும் அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. தகவலுக்கு நன்றி. என் ஊரும் தாரமங்கலம் தான்.
Name : kabilan Date :11/29/2013 8:36:54 PM
நல்ல பல அறிய தகவல்களை கூரியுள்ளீர்கள்.அவசியம் அறிந்து உணர்ந்து அனுபவித்து வழிபட வேண்டிய தலம் .பல முறை சென்றிருந்தாலும் இதை படித்தபின் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது .நன்றி