நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 


திருமலைக்கோவில் 
 
              குவலையத் தோர் வழிபட குன்று தோரிருப்பான் குமரன் என்பது அருள்வாக்கு. நெல்லை மாவட்டம் தென்காசி நகரிலிருந்து நேர்வடக்காக சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பண்பொழி கிராமத்தின் மேற்குப் புற மலை மீது பால முருகனாய் அமாந்து அருள் பாலிக்கிறார் குமரக்கடவுள்.

பூவன்பட்டர் கனவு:

               வரலற்றுச் சிறப்பு மிக்க இந்த திருமலைக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே உருவானது. ஆதி காலத்தில் இங்கு ஒரே ஒரு வேல் மட்டுமே இருந்தது. அந்த வேலுக்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் பகலில் பூஜையை முடித்து விட்டு, கோவிலுக்கு அருகிலுள்ள புளியமரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, முருகப்பெருமான் அவரது கனவில் வந்து, இந்த மலையில் நான் கோவில் கொள்ள வேண்டும். இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் நான் சிலை வடிவில் இருக்கிறேன். அங்கு எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டினால் அதனுள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்வாயாக என்றார்.

    பட்டர் தாம் கண்ட கனவு குறித்து அப்பகுதியை ஆண்ட அரசரிடம் தெரிவித்தார். அதற்கு அரசரோ பகல் கனவு கண்டு விட்டு அதை என்னிடம் வேறு வந்து சொல்கிறீர்களே. பகல் கனவு எப்படி பலிக்கும் பட்டரே ?என்று கேட்டார். ஆனால் பட்டரோ நான் கண்டது பகல் கனவு தான். 

இருந்தாலும் முருகனை நம்புவோருக்கு எந்த நேரம் கனவு வந்தாலும் அது நிச்சயம் பலிக்கும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல அரசர் தனது பணியாளர்களுடன் கோட்டைத்திரடு சென்று பார்த்தார். 

கனவில் வந்த முருகன் சொன்னபடியே எறும்புகள் சென்றுகொண்டிருந்த இடத்தில் ஒரு சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு கோவில் எழுப்ப மன்னர் ஏற்பாடு செய்தார். பந்தள மன்னர் எழுப்பிய கோயில் சபரிமலை ஐயப்பன் கோயில் மட்டுமல்ல திருமலைக்கோவிலும் அவரால் கட்டப்பட்டதுதான். பந்தள ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். 

ஆதி காலத்தில் செங்கோட்டை வட்டாரம் கேரள மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பூவன் பட்டரின் கேட்டுக்கொண்டதற்கிணங்க பந்தள மன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளளார். 

சிவகாமி பரதேசி அம்மையார்:

    பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் சிவகாமி என்ற அம்மையார் வசித்து வந்தார். இவரது கணவர் கங்கைமுத்து தேவர். இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. குழந்தை வரம் வேண்டி,  சிவகாமி அம்மாள் அனுதினமும் திருமலை முருகனை வணங்கி  வந்தார். ஒரு நாள் கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவெடுத்தார்.

இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, சிவகாமி அம்மையார்தான் தன் உயிரையும் பொருட்படுத்தாது தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். அப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் ஒரு சிலை இருக்கிறது.

    இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கியிருந்த ஒரு மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள் என்று அருளினார். 

இதையடுத்து சிவகாமி அம்மையார் தன் சொத்துக்கள் முழுவதையும் கோவிலுக்கே தன்  எழுதி வைத்தார். புளியரை கிராமத்தில் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி 
அவற்றை மீட்டு கோவிலுக்கே சேர்த்தார். அதற்கான கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. அந்த அம்மையார் முருகனுக்கு தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.

திரிகூடமலை:

    திருமலை சுமார் 500 அடி உயரமுடையது. இதை திரிகூடமலை என்றும் சொல்வதுண்டு. இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. இவரை வணங்கி, அடிவாரத்திலுள்ள பாத மண்டபத்தைத் தரிசித்து விட்டுத்தான் கோவிலுக்கு படியேற வேண்டும். மொத்தம் 626 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயிலை அடைய வேண்டும். பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும். மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. 16படிகள் ஏறி தரிசிப்பதால், இவரை வணங்குவோருக்கு பதினாறு செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பூஞ்சுனை :

    மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். தற்போது பூஞ்சுனை என்று இந்த குளத்தை அழைக்கிறார்கள். இங்கு இலக்கியங்களில் கண்ட குவளை என்னும் மலர் இதில் பூத்தது. தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். 

அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது வேறு முருகன் கோவில்களில் இல்லாத  சிறப்பு. 

பார்வதி தேவியின்ஏழு சக்திகளே சப்தகன்னியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மலைமீது திருமலைக்காளி சன்னதியும் உள்ளது. இங்குள்ள மூலவருக்கு முத்துக்குமாரசுவாமி என்று பெயர்.

மூக்கன் :

    பூவன் பட்டரின் கனவில்  வந்த சிலையை கடப்பாரை வைத்து தோண்டி எடுக்க முயன்றபோது சிலையில் மூக்கு பகுதியில்ல் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது.  அந்த சேதம் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதனால் இதை வழிபட வந்த கிராம மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக ’மூக்கன்’ என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படுவது வழக்கம். இது இந்த திருமலை முருகனின் பெயர் தான். மேலும், சிலருக்கு குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும் (காலப்போக்கில் இந்த வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து விட்டது)   

 திருமலைச்செடி :

    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது கட்டாயம் வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள்.

 இன்று இந்த மூலிகைகள் இல்லாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் நிச்சயம்  திருப்பம் ஏற்படும் . ’வி’என்றால் ’மேலான’ என்றும், ’சாகம்’ என்றால் ’ஜோதி’ என்றும் பொருள். விசாக நட்சத்திரம் விமல சாகம், விபவ சாகம், விபுல சாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது என்பது சித்தர்கள் வாக்கு. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால்,  விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர். சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம் ஆகியவை இக் கோவிலில் நடத்தப்படும் முக்கிய திருவிழாக்களாகும்.  இது தவிர ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று விசேஷ பூஜைகளும் நடக்கும்.   

       திருமலைக்கோவிலின் பக்கமுள்ள வடகரை செங்கோட்டை அச்சன்புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள இஸ்லாமிய மதத்தவர்களும் திருமலை முருகனை வழிபடுவது காலங்காலமாக நடைபெற்று வரும் மத நல்லினைக்கத்தின் அடையாளம்.    


வழித்தடம் : மதுரையில் இருந்து திருமங்களம், கள்ளுப்பட்டி,ராஜபாளையம்,தென்காசி வழியாக 12 கிலோமீட்டர் தொலைவில் பண்மொழி கிராமம் உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்க்கொவில், நெல்லை வழியாக ஆலங்குளம், தென்காசி வழியே வரவேண்டும்.  திருநெல்வேலிக்கு ரயில் மற்றும் பஸ் வசதி உண்டு.   திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு பேருந்து வசதி உண்டு.  தென்காசியில் இருந்து பண்மொழி கிராமத்திற்கு பேருந்து வசதி உண்டு.

      -பரமசிவன்  

  படங்கள்:ராம்குமார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : kalimuthu Date :10/30/2012 3:24:50 PM
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்,ஒரு முறை சென்று வாருங்கள் .
Name : balasubramanian Date :10/25/2012 7:54:19 AM
இப்பொழுது கோயில் வரை செல்வதற்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.இக்கோயிலில் திருமணதிற்கு முன்பு பால்குடம் சுமந்தால் நல் வாழ்க்கை அமையும்.கடவுளை நம்பாதவர்கள் ஒரு முறை இக்கோயிலின் படிகளில் ஏறி சற்று நேரம் இருந்து விட்டு திரும்ப படிகள் வழியாகவே இறங்குங்கள்.மாற்றத்தை உணர்வீர்கள்