நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 

          ஜெயலலிதா, ரஜினிகாந்த் என்று பெரும்பாலான சினிமா, அரசியல் பிரபலங்கள் சென்னை ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்டுச் செல்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்கூட மக்களுக்கு தெரியாமல் அதிகாலையிலேயே இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்களாம். தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, மொரிஷியஸ் நாட்டு அன்பர்களும் வந்து அம்பாளை வழிபடுகிறார்கள். அத்தனை வலிமை படைத்தவள் சென்னை ஸ்ரீ காளிகாம்பாள். பாரதியார், சென்னை பிராட்வேயில் இருந்த சுதேசமித்திரன் அலுவலகத்தில் பணிபுரிந்த போது அருகிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயத்திற்கு அனுதினமும் வந்து அம்பாளை வழிபட்டுச் சென்றிருக்கிறார். அப்போது அம்பாள் முன்பு மெய்மறந்து பல பாடல்களை பாடியுள்ளார். மாவீரன் சத்ரபதி சிவாஜி, 1677ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தபோது அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி சென்னை காளிகாம்பாளை வழிபட்டுச் சென்று வெற்றிவாகை சூடியதாக வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி, சத்ரபதி சிவாஜி வழிபட்டுச் சென்ற மகிமையை தனது மகனிடம் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து ராம்குமார் இவ்வாலயத்திற்கு வழிபட வருகிறார்.

இத்தலத்தைப் பற்றி மச்சபுராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஸ்ய புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. சென்னை காளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் மற்றும் வருணன் முதலான முனிசிரேஷ்டர்களும் தேவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். 


செல்வத்துக்கு அதிபதியாகிய குபேரன், இத்தலம் வந்து ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட பின்னர்தான் குன்றாத செல்வகளை பெற்றான் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இவ்வாலயம் பற்றியும் அம்பாளின் வழிபாடுகள் பற்றியும் பக்தர்கள் அறியவேண்டியது அவசியம்.

ஆலயம் அமைந்திருக்கும் அழகு:-

* அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாச, அங்குசத்தை கையிலேந்தி கமலத்தில் புன்னகை செய்கிறாள். ஸ்ரீஅம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு

* அன்னையின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம், அர்த்தமேருவாக அமைந்துள்ளது.

*  இவ்வாலயம் வாஸ்து முறைப்படி அமைந்திருக்கிறது.

* சத்ரபதி சிவாஜி தொழுது வழிபடும் காட்சி அருகில் பாரதியார் நிற்கும் காட்சி காளிகாம்பாள் சன்னதியில் சுதை வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது. வடமேற்கு பகுதியில் துணைவிகள் சமேதராக இருக்கும் அபூர்வ சித்தி-புத்தி விநாயகரும், அருகிலிருக்கும் அகோர வீரபத்ரசாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள்.* வடகதிகாம முருகப்பெருமான் ஸ்ரீவள்ளியுடன் அருள்புரிகின்றார். இங்கு அமர்ந்துதான் உள்ளம் உருகுதைய்யா என்ற பாடலை அன்னை ஸ்ரீ 

ஆண்டவன் பிச்சி என்பவர் 1952ல் பாடியுள்ளார். அப்பாடலைத்தான் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் பாடினார்.

* அம்பாள் சன்னதி சுற்றுச்சுவர்களில் கோமுகம் அருகில் சண்டிகேஸ்வரி, கோஷ்டித்தில் சரஷ்வதி, ஸ்ரீ பிரம்மவித்யா, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ தாட்சாயனி, ஸ்ரீ மஹாலட்சுமி எனும் ஐந்து கன்னியர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பஞ்சலோக விக்ரகங்கள்

ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயத்தில் முப்பத்தி மூன்று பஞ்சலோகத் திருமேனிகள் உள்ளன. இவை அனைத்தும் தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிண்ணித் தேர்:-

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புகழ் பெற்ற கிண்ணித்தேரினை இவ்வாலயத்தில்தான் காண்முடியும். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்த தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.

ஆலய விருட்சம்:-

இவ்வாலயத்தின் தீர்த்தம் : கடல் நீர், தல விருட்சம் : மாமரம், தீர்த்தத்திற்குறிய பரிவார தேவதை : கடற்கன்னி

ஆலய வழிபாடு:-

சிவஸ்ரீ தி.ஷ.சாம்பவமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஆலய அர்ச்சகர்களாக பணியாற்றி வந்தனர். 

தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் புகழுடம்பு எய்திய பின்னர் சிவஸ்ரீ தி.சா.காளிதாஸ் சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் ஆலய அர்ச்சகர்களாக இருந்து தேவியின் நித்திய பூஜாகிராமங்களை சிறப்புற நடைபெற துணைபுரிந்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிழக்கு பூஜையும் பவுர்ணமி தோறும் சண்டி ஹாமம் நடக்கிறது. நூற்றுக்கணக்கான 

சுமங்கலிகள் அடங்கிய ’சுவாசினி சங்கம்’ என்ற அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

தினமும் அர்த்தஜாம பூஜை மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு 

காலத்தில் பக்தர்கள் எலுமிச்சம் பழம் விளக்கேற்றியும் நெய் விளக்கேற்றியும் வழிபாடு செய்வது கண் கொள்ளாக் காட்சி
.
சிறப்பு கட்டணம் இல்லை :-

அம்பாளின் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்று இவ்வாலத்தில் சிறப்புக்கட்டணம் வைக்கவில்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வணங்கவேண்டும்.இரவில் தங்க அனுமதி இல்லை :-

பிராட்வே = சென்னையின் நெருக்கடியான பகுதி என்பதால் விபரீதங்கள் நேரும் சூழல் இருக்கிறது. இதனால் இவ்வாலயத்தில் பெண்கள் இரவில் தங்கி வழிபடும் வழக்கம் இல்லை. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இரவில் தங்க அனுமதி இல்லை.கேட்ட வரம் கிடைக்கும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுதல் என்பது கற்பக விருட்சத்திற்கு வேண்டுவது மாதிரி என்கிறார் காளிதாஸ் சிவாச்சாரியார். “ஒரு முறை வந்து அம்பாளை வழிபட்டாலே வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணரமுடியும். கேட்ட வரம் கிடைப்பதால்தான் கடவுள் இல்லை என்று வெளியே சொல்கிறவர்களும் அம்பாளை வழிபடுகிறார்கள். அம்பாளை வேண்டுவதன் மூலம் திருமணத்தடை நீங்குகிறது. அதனால் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளை வண்ங்கிவிட்டு அவள் பாதத்தில் வைத்து எடுத்த மஞ்சளை தினமும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீரில் கலந்து உட்கொண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அப்படி புத்திர பாக்கியம் பெற்றவர்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்’’ என்கிறார்.பில்லி,சூனியத்திலிருந்து விடுபடஇவ்வாலயத்தில் அமைந்திருக்கும் அகோர வீரபத்ர சுவாமிக்கு பவுர்ணமி நாளன்று வெற்றிலை, மாலை வைத்து வழிபட்டால் பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்றவை எது பற்றியிருந்தாலும் உடனே விலகிவிடும் என்கிறார்கள் ஆலய அர்ச்சகர்கள்.

முதன்முதலாய்திருக்கோயில் விஸ்தரிப்பை மையமாகக் கொண்டு இரண்டு கோடி மதிப்பில் மூன்று மனைகள் வாங்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டுத் திருக்கோயில் சரித்திரத்திலேயே புதிதாக மனைகள் கோயிலுக்கு கிரயம் செய்தது இதுவே முதல் முறையாகும். பிரம்மஸ்ரீ ஏ.ஏழுமலை ஆச்சாரி, பிரம்மஸ்ரீ கே.வேணுகோபால் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ ஜி.விஸ்வநாதன் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ ஆர்.குருநாதன் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ பி.என்.விஸ்வநாதன் ஆச்சார்லு ஆகிய அறங்காவலர்கள் ஆலய நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.

விஷேச நாட்கள்:-

பொதுவாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு. மற்றபடி நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில் எல்லா நாளும் விசேஷ நாட்களே என்கிறார் சோம சேகர சிவாச்சாரியார். அவர் மேலும், “ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் காளிக்கு விசேஷமான மாதங்கள்.

அதுவும் காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசையன்று காளிஜெயந்தி பூஜை விசேஷமாக நடைபெறும்.’’ என்கிறார். ஆலயம் அழைக்கிறது :

ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்
தம்பு செட்டித்தெரு, 
பிராட்வே, 
சென்னை...600001.,
தமிழ்நாடு.
தொலைபேசி : 044...25229624

வழித்தடம் :-

சென்னை மாநகரத்தின் வடசென்னையில் அமைந்துள்ளது இக்கோயில்.  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலை வழியாக இக்கோயிலுக்கு செல்லலாம்.  சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில்  அமைந்துள்ளது.

கட்டுரை : கதிர்
படங்கள் : பாலாஜி


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : Henny Date :4/6/2013 8:04:57 PM
Thanks guys, I just about lost it lokiong for this.