நக்கீரன்-முதல்பக்கம்
நக்கீரன் கோபால் பக்தி சுற்றுலா இன்ப சுற்றுலா கல்வி சுற்றுலா மருத்துவ சுற்றுலா வெளிநாடு சுற்றுலா பாரம்பரியச் சுற்றுலா
 

          குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் அமையப்பெறாதவர்கள், சுகப்பிரசவம் வேண்டுவோர் ஆகியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்து அருள்பாலிக்கிறாள் அன்னை ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை!.மிகப்பழங்காலம் தொட்டே கர்ப்பரட்சாம்பிகை சன்னதி, மகளிர்க்கு மிகச்சிறந்த ஆரோக்கியமான ஆலயமாக விளங்குகிறது. மகப்பேறு வரம் கேட்டு வந்து வணங்கிவிட்டு போவது மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்கள் இவ்வூரிலேயே தங்கி இவ்வாலயத்தில் வழிபட்டு குழந்தை பெற்றதும் தங்கள் ஊர் திரும்புகிறார்கள்.

அன்னை அருள்பாலிக்கும் இவ்வூரில் இதுவரை எந்த கர்ப்பிணிக்கும் கருச்சிதைவு என்பதே இல்லை. இது கண்கூடான உண்மை. நம்பிக்கையோடு ஆயிரக் கணக்காணோர் ஆண்டு முழுவதும் வந்து தரிசித்து பயன்பெறும் இத்திருத்தலம் திருக்கருகாவூர்.தலப்பெயர்கள் :-

திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப் பெறும் இத்தலம், மாதவி வனம், முல்லை வனம் திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மாதவி முல்லைகொடியை தலவிருட்சமாக கொண்டுள்ளதால் மாதவி வனம் என்றும் கரு + கா +ஊர்(கரு...தாயின் வயிற்றில் உள்ள கருவை, கா...காத்த , ஊர் கருகாவூர் எனப்பெயர்)

கர்ப்பரட்சகி, கருக்காத்தநாயகி, கரும்பனையாள் என்றும் அழைக்கப்படுகிறாள் அன்னை.

தல புராணம்:-

முன் காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் அவருடைய மனைவி வேதிகையும் ஆசிரமத்தில் தங்கி தவம்செய்து வந்த முனிவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர். இத்தம்பதிகள் தங்களுக்கு குழந்தை இல்லையே என்ற மனக்கவலையை முனிவர்களிடம் கூறினார்கள். முல்லை வனத்தில் உள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கினால் வேண்டியது கிடைக்கும் என்று முனிவர்கள் உபதேசித்தனர்.நித்துருவரும் வேதிகையும் அவ்வாறே செய்தனர். என்ன அதிசயம்...வேதிகை கருவுற்றார்.

கருவுற்ற வேதிகை தனித்திருந்த சமயத்தில் கர்ப்ப வலியால் மயக்கமுற்று சுயநினைவிழந்து இருந்தபோது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்க மயக்கமுற்ற வேதிகையால் பிச்சையிட முடியவில்லை. இதை அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. 

வேதிகை, அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட... அம்பாள் கர்ப்பரட்சகியாகத் தோன்றி கலைந்த கருவை உருவாகும் நாள் வரையிலும் வைத்து காப்பாற்றி குழந்தையை கொடுத்தாள். இறைவியின் மகிமையை கண்டுணர்ந்த வேதிகை, இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாகவே எழுந்தருளி உலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய அம்பாள் அவ்வாறே அருள்பாலித்தாள். இந்த நிகழ்வுக்கு பிறகு இத்தலத்திற்கு திருக்கருகாவூர் என்றும் அம்பாளுக்கு ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் வந்து அதுவே நிலைத்து விட்டது. குழந்தை நைந்துருவனுக்கு தாய்பால் இல்லாததால் அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச்செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும் பால்குளம் தோன்றியது. அது ஆலயத்திற்கு முன்புறம் ஷுரகுண்டம் என்று இன்றும் இருக்கிறது. அதனால்தான் இத்தலத்து நாயகியை நினைத்து வணங்கினால் கரு உண்டாகிறது. கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஆகிறது.

ஆலயம் அமைந்திருக்கும் அழகு:-

* தமிழ்நாட்டின் திருக்கருகாவூரில் வெட்டாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது. இத்திருக்கருகாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு தெற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்திலும் கும்பகோணத்திற்கு தென்மேற்கே இருபது கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

* இவ்வாலயம் 460 அடி நீளமும் 284 அடி அகலமும் கொண்டிருக்கிறது. கிழக்கில் ராஜகோபுரமும் தெற்கு பக்கம் நுழைவு வாயிலும் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததுமே வடப்பக்கம் வசந்த மண்டபம்! . சுவாமி கோயிலும் அம்பிகை கோயிலும் தனித்தனி பிரகாரத்திற்குள் அமைந்திருக்கிறது. 

* சுவாமி கோயிலுக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவையும் தென்கிழக்கில் மடப்பள்ளி அறுபத்து மூன்று நாயன்மாரும், வடகிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும் யாகசாலையும் இருக்கின்றன.

*சுவாமிக்கு வடகிழக்கில் நடராஜர் சந்நிதியும் நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாஸ்கந்தர் தல விநாயகர் கற்பகப்பிள்ளையார் சந்நிதியும் இருக்கின்றன.

*உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தானச்சாரியார், நால்வர் சன்னதிகளும் தென்பக்கம் தட்சிணாமூர்த்தி நிருதிவிநாயகர் சன்னதிகளும் மேல்புறம் அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேஸ்வரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்திருக்கின்றன.நித்திய பூஜை:-

காலை 5.30 முதல் 6 மணி வரை உஷக்காலம், 8.30 முதல் 9.30 மணி வரை காலைசந்தி, 12.30 க்கு உச்சிக்காலம், மாலை 5.30 முதல் 6.30 மணி வரை சாயரட்சை, இரவு 8 மணிக்கு அர்த்தயாமம் என்று காரண காமிக ஆகமப்படி இக்கோயிலுக்கு நித்தம் பூஜை நடைபெற்று வருகிறது.

திருமணம் கூடிவர படிக்கு நெய்மெழுகுதல்:-

திருமணம் கூடிவராத கன்னியர்கள், இக்கோயிலுக்கு நேரில் வந்து அம்மன் சன்னதியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நெடுங்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்கிறார்கள் இவ்வூர் வாசிகள். 

குழந்தை பாக்கியம் பெற நெய் மந்திரித்தல்:-

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரு உண்டாவதற்கு அம்பாள் பாதத்தில் நெய் பிரசாதம் வைத்து மந்திரிக்க வேண்டும். மந்திரித்த நெய் பிரசாத்துடன் அறை கிலோ சுத்தமான நெய் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நெய்யை தினமும் இரவு தூங்கச்செல்லும் முன், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாளை நினைத்து வணங்கி தம்பதிகள் சாப்பிடவேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.கணவனால் தினமும் நெய் சாப்பிடமுடியாவிட்டாலும் மனைவி சாப்பிட்டுவரவும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் மற்றும் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை. இதர மருந்து சாப்பிடுகிறவர்கள் அதனையும் சாப்பிடலாம்.

பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஐந்து நாட்கள் நெய் சாப்பிடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளின் அருளால் மகப்பேறு உண்டாகும்.

நேரில் வர இயலாத வெளியூர் அன்பர்கள் ஆலய நிரவாகிக்கு நூறு ரூபாய் மணியார்டர் மூலம் அனுப்பி தபால்மூலம் மந்திரித்த நெய் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சுகப்பிரசவம் அடைய விளக்கெண்ணெய் மந்திரித்தல்:-

கர்ப்பினி பெண்கள் சுகப்பிரசவம் அடைய இத்திருக்கோயிலின் கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது.இந்த விசேஷமான எண்ணெய்... பிரசவ வலி ஏற்படும்போது கர்ப்பிணியின் வயிற்றில் தடவினால் எந்த விதமான கோளாறுகளோ பேறு கால ஆபத்துகள், பின்விளைவுகள் இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும் என்பது நெடுங்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கை இதுவரை வீண் போனதில்லை என்கிறார்கள் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள்.

தங்கத்தொட்டில் பிரார்த்தனை:-

தமிழக திருக்கோயில்களிலேயே முதன் முறையாக தங்கத்தொட்டில் பிரார்த்தனை இக்கோயிலில் அறிமுகப்பப்படுத்தப் பட்டுள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தங்கள் முந்தானையில் ஏந்தி அதனை தங்கத்தொட்டிலில் இட்டு சன்னதியை வலம் வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும். குழந்தை பேறு பெற்றுவர்கள் தங்கத்தொட்டில் பிரார்த்தனை நிறைவேற்றலாம். அதாவது குழந்தையை தொட்டிலில் இட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம். தங்கத்தொட்டில் பிரார்த்தனைக்கு திருக்கோயில் அலுவலகத்தில் 550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். 

ஆலயம் அழைக்கிறது :

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி
திருக்கருகாவூர் அஞ்சல்,
பாபநாசம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
தொலைபேசி : 04374....273423
www.garbaratchambigaitemple.org
e.mail id: garbaratchambigai@ sancharnet.in

வழித்தடம் : 

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு பஸ் வசதி உள்ளது.  சென்னையில் இருந்து கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு ரயில் வசதியும் உள்ளது.  கும்பகோணம், தஞ்சாவூரில் இருந்து திருகருகாவூருக்கு பஸ் வசதி உள்ளது.

-கே.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :